ராகுல் காந்தியின் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அவரது பயணத்தின் சாமானிய மக்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களோடு செல்ஃபி எடுப்பது, சைக்கிள் ஓட்டுவது, புல்லட் ஒட்டுவது, ஓட்டப்பந்தயம் மேற்கொளது என உற்சாகமாக ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வருகிற 24ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார். ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று பாரத் ஜோடோ யாத்ராவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், ஜனநாயகத்தை காக்க ராகுலின் நடைபயணத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மநீம துணைத் தலைவர் மவுரியா தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னை அண்ணாநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதை, என் பயணத்தை தெரிந்துகொண்டாலே உங்களுக்கு புரியவரும். ஓரிரு வாரங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.” என்றார். எனவே, எதிர்வரவுள்ள 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக + காங்கிரஸ் + மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.