பட்டுக்கோட்டை அருகே சொத்துப் பிரச்சனையில் 2-வது மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வருபவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி சாமுவேல் (15) என்ற மகனும், சரவணன் (13) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் உயிரிழந்துவிட்டார்.
இதனால், சரண்யா பாலன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் உதயசூரியத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், கணவன் – மனைவி இருவரும் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தான், மே 5ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை காலை பாலனின் முதல் மனைவியின் மகனான மேலுாரை சேர்ந்த கபிலன் (20), அவரது நண்பர் குகன் (20) மற்றும் பார்த்திபன் (20) ஆகியோர் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் ஆஜராக முயன்றனர். இதையடுத்து, அவர்கள் நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், மூவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், சரண்யாவின் கணவர் பாலன், சுமார் ரூ.43 லட்சம் மதிப்பிலான இடம் ஒன்றை வாங்கி, அதை முதல் மனைவியின் மகனான கபிலன் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் சரண்யாவுக்கு தெரியவந்ததால், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பாலன், சரண்யாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, பாலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கபிலன், குகன் ஆகிய இருவரையும், பார்த்திபன் வீட்டில் தங்க வைத்து, சரண்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தொடர்ந்து பாலனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.