பாத்ரூம் அருகே நின்று கொண்டு மாணவிகளுக்கு ஆபாசமாக சைகை செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுரேஷ்பாபு என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே தினமும் குடித்துவிட்டு பள்ளிக்கு வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் சுரேஷ்பாபு, மாணவிகளின் பாத்ரூம் அருகே நின்று கொண்டு ஆபாச சைகை செய்வதும், மாணவர்களை தனது கால்களை பிடித்து விடச் சொல்லி கட்டாயப்படுத்தியும் வந்திருக்கிறார். தலைமை ஆசிரியரிடம் மாணவ, மாணவிகள் முறையிட்ட போதும் இதுகுறித்து ’வீட்டில் யாரும் சொல்லக்கூடாது’ என்று தலைமை ஆசிரியர் மிரட்டி இருக்கிறார். அதன் பின்னரும் ஆசிரியர் சுரேஷ்பாபு எப்போதும் போலவே செய்து வந்திருக்கிறார்.

இதனால் பொறுமை இழந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் சொல்லி அவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியர் சுரேஷ்பாபுவை முற்றுகையிட்டு அவருடன் சண்டை போட்டுள்ளனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பின்னர் ஆசிரியர் சுரேஷ்பாபுவை கைது செய்தனர். அரசுப் பள்ளியில் தினமும் குடித்து விட்டு வந்து மாணவ, மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியரின் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.