அம்பத்தூரை அடுத்த விஜயலட்சமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (37). இவர், தனியார் நிறுவன ஊழியர். இவர், ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அந்த வகையில், இந்த ஆப் மூலம் நெல்லையைச் சேர்ந்த இசக்கி சங்கர் (20) என்ற வாலிபருடன் மாரிச்செல்வத்திற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி இரவு இசக்கி சங்கர் கொரட்டூர் ஏரி அருகே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக மாரி செல்வத்தை அழைத்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது, இசக்கி சங்கருடன் அவரது நண்பரான முத்து (19) என்பவர் இருந்துள்ளார். சிறிது நேரத்தில், நன்றாக பேசிக்கொண்டிருந்த மூவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மாரி செல்வத்தை தாக்கி விட்டு அவரிடம் இருந்த 2 சவரன் செயின், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரி செல்வம் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இருவரையும் தேடி வந்தனர். கடந்த 25ஆம் தேதி இசக்கி சங்கரின் செல்போன் டவரை ஆய்வு செய்தபோது, அது திருநெல்வேலியை அடுத்த குப்பண்ணாபுரத்தில் காண்பித்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கிருந்த இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து கொரட்டூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து 8 சவரன் நகைகளும் ரூ.30,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.