ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள கலகோட் பகுதியில் நடந்து வரும் என்கவுன்டரில், பாதுகாப்புப் படையினர் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த மேலும் ஒரு ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், ராணுவத்தின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாதிகள் அப்பகுதியில் பல தாக்குதல்களில் ஈடுபட்டதால் இது மிகப்பெரிய வெற்றி என்று இந்திய ராணுவம் கூறுகிறது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் “குவாரி” என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும், கடுமையான பயங்கரவாதி என்றும் கூறப்படுகிறது. இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, அவர் பாக் மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னணியில் பயிற்சி பெற்றவர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்தர பயங்கரவாத தலைவர் என்றும்,. டாங்கிரி & கண்டி தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும், அவர் ஒரு IED நிபுணர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டரில் இதுவரை இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து வீரர்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது. துப்பாக்கிச் சண்டையில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் காயமடைந்து உதம்பூர் இந்திய ராணுவத்தின் அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை இந்திய ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வமாக சஉறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஒரு திரளான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பல்லன்வல பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் பேட்டரிகள் பொருத்தப்பட்ட ஐ.ஈ.டி ரக பெட்டி, ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு பிஸ்டல் மெகசின்கள், முப்பத்தெட்டு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஒன்பது கைக்குண்டுகள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.