நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், நகரங்கள், கிராமங்கள் உட்பட அனைத்து தரப்பிலும் மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கியிருக்கின்றன. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதே கிடையாது. அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தங்களது முன்னோர்கள் தீபாவளியை கொண்டாட கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்ததே காரணம் என்கிறார்கள்.
அந்தக் கடனை அடைக்க முடியாமல் பெரியவர்கள் பட்ட அவதியை கண்ட அடுத்த தலைமுறை மக்கள், 1958ஆம் ஆண்டில், ”இனி தீபாவளியை கொண்டாடவே கூடாது” என்று தீர்மானம் போட்டு அன்று தொடங்கி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இந்த கிராமங்களில் கடைபிடித்து வருகின்றனர். மொத்தம் 13 கிராமத்தில் வசிக்கும் மக்கள் இந்த முடிவெடுத்து செயல்படுத்தி வருகின்றனர்.
வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் கூட தீபாவளியை கொண்டாடுவது இல்லையாம். இது மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது. தீபாவளிக்கு பதில் இவர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். தீபாவளியை கொண்டாடாமல் தவிர்க்கும் மாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்களின் காரணம் விசித்திரமானதாக இருந்தாலும், நியாயமானதாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.