நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். இதனால், 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்த நிலையில், ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 17ஆம் தேதியே முழு ஆண்டுத் தேர்வுகளைத் தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, புதுச்சேரியில் வைரஸ் பரவல் காரணமாக, 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.