மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து மன ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாகக் கூறிய கணவரின் விவாகரத்து வழக்கில், டெல்லி ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மனைவி தன்னை மன ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கோரினார். திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும், தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி குடும்ப நல நீதிமன்றம், அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், இதை எதிர்த்து அந்த பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இப்போது ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது, நீண்ட காலம் வேண்டுமென்ற வாழ்க்கைத் துணைக்கு உடலுறவை மறுப்பதும் மன ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாகவே கருதப்படும் என்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அதேநேரம் இதில் மற்றொரு முக்கிய கருத்தைக் கூறி கீழமை நீதிமன்றம் விவாகரத்து வழங்கி அளித்த தீர்ப்பை டிஸ்மிஸ் செய்தது.
அந்த நபர் தனது மனுவில், திருமணமான சிறிது காலத்திலேயே தனது மனைவி ஏதேதோ காரணங்களைச் சொல்லி தன்னை விட்டு விலகியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவிக்கு அவரது கோச்சிங் சென்டரை நடத்துவதில் மட்டுமே ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த நபர் உடலுறவைக் கூட மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், பாலியல் உறவை மறுப்பதும் மன ரீதியாக ஒருவரைக் கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்று தெரிவித்தனர்.
வேண்டுமென்றே, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாக உடலுறவை மறுப்பதும் கொடுமைப்படுத்துவதற்குச் சமம் தான் என்று கூறியுள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் அந்த நபர் தெளிவாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. இந்த வழக்கில் கணவர் தனக்கு ஏற்பட்ட மன ரீதியான கொடுமைகளை நிரூபிக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்த டெல்லி ஐகோர்ட், இது சாதாரணமாகத் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனை தான் என்றும் குறிப்பாக இந்த விவாகரத்தில் மனைவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருந்ததாக நீதிபதி தெரிவித்தார்.
இனிமேல் கணவர் தன்னுடன் வாழவே முடியாது என்ற ரேஞ்சில் மனைவி எதையும் செய்யவில்லை என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், இதை எல்லாம் வைத்து அந்த நபர் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார் என்று சொல்லிவிட முடியாது என்று தெரிவித்தது. மேலும், விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்தது.