Court: உடல் ரீதியான உறவு இல்லாமல் ஒரு மனைவி தனது கணவனைத் தவிர வேறு ஒருவரை காதலிப்பது விபச்சாரமாக கருதப்படாது என்றும் விபச்சாரம் என்பது உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விவாகரத்து பெற்ற வழக்கு ஒன்றில், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எதிர்த்து கணவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், தனது மனைவி வேறொரு ஆணைக் காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நான் மாதம் ரூ.8,000 சம்பளம் வாங்கும் ஒரு வார்டு பாயாக வேலை செய்வதாகக் கூறிய கணவர், தனது மனைவி ஏற்கனவே இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் ரூ.4,000 பெற்று வருவதாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 இன் கீழ் கூடுதலாக ரூ.4,000 வழங்குவது மிகையானது என்றும் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா, கணவரின் நிதி நெருக்கடி கோரிக்கை ஆதாரமற்றதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஜீவனாம்ச தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், ஒரு மனைவி தனது கணவனைத் தவிர வேறு ஒருவரிடம் காட்டும் அன்பும் பாசமும் உடல் ரீதியான உறவை உள்ளடக்கியதாக இல்லாவிட்டால் அது விபச்சாரமாக கருதப்படாது என்றும் விபச்சாரம் என்பது உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி கணவர் சமர்ப்பித்த சம்பளச் சான்றிதழ் அவர் பணிபுரிந்த மருத்துவமனை வழங்கிய சான்றிதழில், வழங்கப்பட்ட இடம் மற்றும் தேதி போன்ற முக்கியமான விவரங்கள் இல்லை என்பதை குறிப்பிட்ட நீதிபதி, தனது மனைவி அழகு நிலையம் நடத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதாக கணவரின் கூற்றையும் நிராகரித்தது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.