இங்கிலாந்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு லீவு கேட்டு தராததால் சலூன் கடை உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில், நான்கு முதல் ஐந்து நாள்கள் கடுமையான வலியை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. இந்த நிலையில், உலகில் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா, ஜாம்பியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. பெண்களின் வலியை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளித்து ஸ்பெயின் அரசு சட்டம் இயற்றியது. அதனடிப்படையில், ஐரோப்பாவில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் நாடாக ஸ்பெயின் தற்போது இடம்பெற்றுள்ளது. மேலும் அனைத்து நாட்டிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
இந்தநிலையில் இங்கிலாந்தை சேர்ந்த செலின் தோர்லி என்ற பெண், லாண்டாப் வடக்கு பகுதியில் இயங்கிவரும் கிறிஸ்டியன் டோனெல்லி என்பவருக்கு சொந்தமான சலூன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹாலோவீன் பார்ட்டியில் பங்கேற்றதையடுத்து, செலின் தோர்லியால் மறுநாள் திங்கட் கிழமையன்று பணிக்கு செல்ல முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விடுப்பு கேட்டு சலூன் கடை உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், நான் சொல்லுவது உங்களுக்கு கோபமாகத்தான் இருக்கும், ஆனால் மன்னித்துவிடுங்கள், இன்று என்னால் பணிக்கு வர முடியாது. ஏனெனில் உடல்நிலை இப்படி மோசமாகும் என்று நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த கடை உரிமையாளர், பொய் கூறுகிறார் என நினைத்து நீங்கள் வரவே தேவையில்லை என்றும் உங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, தொழிலாளர் தீர்ப்பாயத்தில் செலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், நேர்மையாக உண்மையான காரணத்தை கூறி செலின் விடுப்பு கேட்டுள்ளார் என்றும் மாதவிடாயால் அதீத வயிற்று வலி ஏற்பட்டதால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும் அவரை கவனித்து கொள்வதற்காக செலினின் மாமியாரும் அன்று விடுமுறை எடுத்துள்ளார் எனவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, செலினை பணி நீக்கம் செய்ததற்காக கடை உரிமையாளருக்கு 3,453 பவுண்ட் அபராதம் விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயாகும்.