சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் 47 வயது பெண். இவர், கூலி வேலைக்கு செல்லும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விருகம்பாக்கம், சாய் நகர் மார்க்கெட் அருகே வேலைக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர், கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று இவர் தனது தாய் எனக்கூறி அறை எடுத்துள்ளார்.
பின்னர், இருவரும் அங்கு உல்லாசமாக இருந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் உனக்கு நகை வாங்கி தருகிறேன் எனக்கூறி அவரை தி.நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அந்த பெண் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க தாலியை வாங்கிய இளைஞர், இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அந்த இளைஞர் வராததால், செல்போனில் அவரை தொடர்பு கொண்டு நகைகளை கேட்டுள்ளார். ஆனால், நகைகளை திருப்பி தருவதாக கூறிய அந்த இளைஞர், நகையோடு எஸ்கேப் ஆகியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் நடந்த சம்பவத்தை கூறி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் அந்த விடுதிக்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்ததில், அந்த இளைஞர் கேரள மாநிலத்தை சேர்ந்த எட்வின் ஷான் (வயது 32) என்பது தெரியவந்தது. ஆனால், விடுதியில் அவர் உண்மையான ஆதாரங்களை கொடுத்தாரா? அல்லது போலியான அவணங்கள் மூலம் அறை எடுத்து, இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.