டெல்லியின் பஸ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கடந்த ஒருமாதத்திற்கு முன்புதான் உத்யோகர் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பஸ்சிம் விஹார் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பிறகு, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜோதியைச் சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர், ஜோதி வந்த ஸ்கூட்டரையே எடுத்துக் கொண்டு அந்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், “மகளுக்கு யாருடனும் எந்தவிதமான பகையோ அல்லது தகராறோ எதுவும் இல்லை. தனது மகளைக் கொன்ற நபரை விரைவில் கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து 3 குழுக்களாகப் பிரித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஜோதியைச் சுட்டுக் கொன்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே கொலை குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்மையில் கூட இளம்பெண் ஒருவர் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி சாலையில் தனியாகச் செல்லும் பெண்கள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.