திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமு மூர்த்தி. இவரது மனைவி ஆஷா (39). இவர், கடந்த 8ஆம் தேதி வீட்டின் குளியல் அறையில் காலை குளிக்கச் சென்றார். அப்போது, குளியலறை ஜன்னலில் செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அந்த செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.
அது, ஆஷா வீட்டுக்கு எதிர் வீட்டை சேர்ந்த குமார் மகன் ஹரிஹரன் (எ) வசந்த் (23) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, ஆஷா அங்கு சென்று கேட்டபோது வசந்த் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் வயிற்றில் எட்டி உதைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வசந்த் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆஷா, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், தனது வீட்டு குளியல் அறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த ஹரிஹரனை, தட்டி கேட்டபோது, அவர் தன்னை தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆஷா கடம்பத்தூர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஹரிஹரன் (எ) வசந்த் மீது குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கடம்பத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.