உத்தரப்பிரதேச மாநிலம் எடவா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி (28). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவர் இறந்துவிட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அஞ்சலி குழந்தைகளின் எதிர்காலம் கருதி வீடு கட்டுவதற்காக நிலம் வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சுபேந்திர யாதவ் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரை அணுகியுள்ளார். அவரிடம் அஞ்சலி ரூ.6 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், பணம் வாங்கி 2 மாதங்கள் ஆகியும் நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளர் சுபேந்திர யாதவ். பலமுறை அவரிடம் முறையிட்டும் கொடுத்த பணமும் கிடைக்கவில்லை, நிலமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சலி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திர யாதவ், எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிகொள் என்று கூறியுள்ளார். இதனால், அஞ்சலி கடந்த 7ஆம் தேதி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, அஞ்சலிக்கு வலுக்கட்டாயமாக சுபேந்திர யாதவ் மது ஊற்றிக் கொடுத்துள்ளார். பின்னர், அவரது நண்பர் கவுரவ் உடன் சேர்ந்த அஞ்சலியை கொடூரமாக தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து, அஞ்சலியின் உடலை தன்னுடைய தந்தை மற்றும் மனைவிக்கு வீடியோ கால் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அஞ்சலியின் உடலை கார் மூலம் யமுனை ஆற்றங்கரை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
அரைகுறையாக எரிந்த உடலை யமுனை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். இதற்கிடையே, அஞ்சலியை காணவில்லை எனவும் சுபேந்திர யாதவின் வீட்டருகே அஞ்சலியின் இரு சக்கர வாகனம் எரிந்த நிலையில் இருப்பதாகவும் போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, சுபேந்திர யாதவை பிடித்து விசாரித்தபோது, நண்பருடன் சேர்ந்து அஞ்சலியை கொலை செய்து உடலை எரித்து யமுனை ஆற்றங்கரையில் வீசியதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்பு படை உதவியுடன் யமுனை ஆற்றங்கரையில் சில மணி நேர தேடுதலுக்கு பிறகு அஞ்சலியின் உடல் மீட்கப்பட்டது. இதனால், சுபேந்திர யாதவ் மற்றும் அவரது நண்பர் கவுரவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அஞ்சலியின் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய துண்டு, கார், அஞ்சலியின் எரிந்து போன இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சுபேந்திர யாதவின் தந்தை மற்றும் மனைவிக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.