தென் கொரியாவில் கொலை செய்யும் ஆசையால் பெண் ஒருவரைக் கொன்று உறுப்புகளை சிதைத்ததற்காக 23 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரைம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களில் வரும் கொலைகளால் ஏற்பட்ட ஆர்வத்தால் இந்த கொலையை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். புத்தகங்களிலும், டிவியிலும் அறிந்த கொலையை தானே நேரடியாக செய்து பார்க்க விரும்பினார் என்று தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. ஜங் யூ ஜங் என அடையாளம் காணப்பட்ட அந்த இளம்பெண், வெள்ளிக்கிழமை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
முதலில் இறந்த பெண்ணை தானே கொன்றதாக அவர் கூறினார். ஆனால், பின்னர் தான் சொன்னது பொய் என்று பல்டி அடித்தார். “ஜங் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களில் இருந்து கொலைவெறி உருவாகி, ஒருவரைக் கொல்ல திட்டம் போட்டிருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டது” என்று அந்நாட்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். காவல்துறையின் கூற்றுப்படி, அவர் கொலையை கவனமாக திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டிருக்கிறார். அவரது செல்போனை சோதனையிட்டதில் சம்பவம் நடப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பு உடலை மறைப்பதற்கான வழிகளை அவர் இணையத்தில் தேடியது தெரியவந்தது. அவர் பல கிரைம் தொடர்பான டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகவும், கிரைம் புத்தகங்களை நூலகத்திலிருந்து பெற்று படித்ததாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியையிடம் 9ஆம் வகுப்பு மாணவியின் தாயாகக் காட்டிக் கொண்டு பேசிய ஜங் தனது மகள் டியூஷன் கற்க வீட்டிற்கு வருவதாகக் கூறியுள்ளார். குற்றம் நடந்த நாளில், ஜங் பள்ளி மாணவி போல சீருடை அணிந்து மாறுவேடமிட்டு ஆசிரியை வீட்டுக்குச் சென்று, கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்டவர் காணாமல் போனது போல தோற்றமளிக்க, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகுதியில் வீசியுள்ளார். கொலைக்குப் பின் தடயத்தை மறைக்க ஆசிரியையின் மொபைல் போன், அடையாள அட்டை போன்ற பொருட்களையும் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளார்.
ஜங் பிணத்தை சூட்கேசில் அடைத்து காட்டுப் பகுதிக்குச் சென்றபோது ஒரு டாக்சியில் சென்றுள்ளார். அந்த டாக்சி டிரைவர் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்ததால் ஜங் மாட்டிக்கொண்டார். போலீசார் அங்கு சென்று இரத்தக் கறை படிந்த ஆடைகளைக் கண்டுபிடித்தனர். ஜங் ஒரு மனநோயாளியா என்பது குறித்து சோதனை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். “ஜங் தான் கொலை செய்ததற்காக வருந்துவதாகவும் கூறினார். அவர் ஒரு மனநோயாளியா என்பதை நாங்கள் பரிசோதித்து வருகிறோம். ஜங் தனிமையாக இருந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்றதிலிருந்து வேலை இல்லாமல் இருந்திருக்கிறார்” என காவல்துறையினர் கூறுகின்றனர்.