ஆதார் அட்டையை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், இந்த ஆதார் அட்டையை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2015இல் ஹரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இறந்தவரின் ஆதார் அட்டையில் பிறந்த தேதி ஜனவரி 1, 1969 என்றும் பள்ளி இறுதி ஆண்டு சான்றிதழ் (டிசி)-ல் அக்டோபர் மாதம் 1970 என்று குறிபிடப்பட்டு இருந்தது.
பள்ளி சான்றிதழ் அடிப்படையில் அவருடைய வயது 45 என கணக்கிட்ட தீர்ப்பாயம், இறந்தவரின் குடும்பத்திற்கு 19,35,000 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஐகோர்ட்டில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆதார் கார்டு அடிப்படையில் பார்த்தால் உயிரிழந்த நபரின் வயது 47 என்பதால் இழப்பீட்டு தொகையை 9,22,000 ரூபாயாக குறைத்தது.
பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மேல் முறையீடு செய்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”2015ஆம் ஆண்டின், சிறார் நீதி சட்டம் 94-வது பிரிவின் படி பார்த்தால், பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் ஒருவரது வயது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கையில் வெளியிட்ட தகவலின் படி, ஆதார் அடையாளத்தை உறுதி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒருவரின் பிறந்த தேதிக்கு ஆதார் ஆதாரமாக கருத முடியாது. எனவே, ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அடையாள அட்டை ஒரு ஆணவம் கிடையாது” என்று உத்தரவிட்டனர்.