இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளைப் பெற்றிடவும் பயன்படுகிறது. பொதுமக்கள் புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதார் விவரங்களை திருத்தம் செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV) மூலம் 7 தாலுக்கா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
மேலும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்(ELCOT) மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் 2 நிரந்தர ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. மேலும் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் மை ஆதார் என்ற இணையதளத்திலும் விண்ணபிக்கலாம். தற்போது அரூர் வட்டம் தீர்த்தமலை உள்வட்டத்திற்குட்பட்ட 14 வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயனடையும் வகையில் புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதார் விவரங்களை திருத்தம் செய்யவும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV) மூலம் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் புதுப்பித்திட தேவையான ஆவணங்களான 1.) வாக்காளர் அடையாள அட்டை 2.) குடும்ப அட்டை, 3.) ஓட்டுநர் உரிமம், 4.) பான் கார்டு, 5.) வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.