தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்தாலும், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதை நிறுத்துவதற்கு உண்டான முயற்சியாகக் கூட இருக்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு, மூன்று வீடுகள் உள்ள இடங்களில் பொது மின் இணைப்பிற்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிப்பதையும் கண்டிக்கிறோம். மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து, மாதம்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்து வசூல் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். ஒருவேளை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும் மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என்றார்.