வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவத்தை வாக்காளர்கள் தாமாக முன்வந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. எனவே, வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள வேண்டும். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் https:/www.nvsp.in என்ற இணையதளம், ‘ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப்’ வாயிலாகவும் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாதவர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, வங்கி, அஞ்சலகங்களில் புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை சமர்ப்பித்து உறுதி செய்து கொள்ளலாம்.

2023ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளில் மாற்றம் செய்ய வேண்டிய பணிகள் நடைபெற உள்ளன. அதில், தகுதியுள்ள வாக்காளர்கள் பெயரை சேர்க்கவும், தகுதியில்லாத பெயர்களை நீக்குவது தொடர்பான பணி நடைபெறும். 17 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்னதாகவே மனு செய்யலாம். 18 வயது பூர்த்தி செய்யும் காலாண்டு முடிவில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால், 18 வயது நிரம்பியவர்கள் ஒரு வருடத்துக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.