டிகிரி சான்றிதழில் ஆதார் எண்ணை அச்சிடக் கூடாது என்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (ஏஐசிடிஇ) அனுமதி பெற்ற நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் மாநில அரசுகள் சில, மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களிலும் டிகிரி சான்றிதழ்களிலும் முழுமையான ஆதார் எண்ணை அச்சிடத் திட்டமிட்டு உள்ளதாக சில ஊடக நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மாணவர் சேர்க்கையின்போதோ அல்லது வேலை வாய்ப்பின்போதோ சரிபார்ப்பிற்காக இந்த ஆவணம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது UIDAI ஆதார் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து UIDAI நிறுவனம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்குத் தெரிவித்தது. இந்த நிலையில் ஆதார் (தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்) ஒழுங்குமுறைச் சட்டம் 2016-ன் படி, இது தவறு என்று தெரிவிக்கப்படுகிறது. பொது வெளியில் எந்த ஒரு தகவல் தளத்திலும் ஆதார் எண்ணைப் பகிர்வதோ, பதிவு செய்வதோ தவறாகும். தேவைப்பட்டால், சில எண்களை மட்டும் குறிப்பிட்டு, மீத எண்களை அடித்துவிட்டு ஆதார் எண்ணைக் குறிப்பிடலாம்.
இதன்படி, ஆதார் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தற்காலிகச் சான்றிதழ்கள் மற்றும் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.