அரசு ஆதரவு பெறும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீட்டில் பான் கார்டை வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இப்போது கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான KYC-ன் (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆதார் விவரங்களை வழங்காமல் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால், அரசு ஆதரவு பெறும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீட்டில் பான் கார்டை வழங்க வேண்டும் என்றும் சமீபத்திய அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறு சேமிப்பு சந்தாதாரர்கள் PPF, SSY, NSC, SCSS அல்லது வேறு ஏதேனும் சிறுசேமிப்புக் கணக்கைத் திறக்கும் போது ஆதாரை சமர்ப்பிக்க 30 செப்டம்பர் 2023 வரை அவகாசம் இருக்கும்.
ஆதார் இல்லாமல் சிறு சேமிப்புத் திட்டத்தைத் தொடங்க விரும்பும் புதிய சந்தாதாரர்கள் கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும். கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சிறு சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை வழங்கத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் அவர்களது கணக்கு முடக்கப்படும்.UIDAI இலிருந்து ஆதார் எண்ணை இன்னும் பெறவில்லை என்றால் ஒருவர் ஆதார் பதிவு எண்ணையும் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறு சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட இரண்டு மாதங்களுக்குள் பான் எண்ணை டெபாசிட் செய்பவர் சமர்ப்பிக்கத் தவறினால், அந்த நபரின் கணக்கு முடக்கப்படும்” என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கணக்கு திறக்கும் போது PAN ஐ சமர்ப்பிக்கவில்லை என்றால், பின்வரும் சந்தர்ப்பங்களில் கணக்கு தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் அதை சமர்ப்பிக்க வேண்டும்
அதாவது, 1. கணக்கில் எந்த நேரத்திலும் இருப்பு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கவேண்டும். 2. எந்த ஒரு நிதியாண்டிலும் கணக்கில் உள்ள அனைத்து வரவுகளின் மொத்த தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கவேண்டும். கணக்கில் இருந்து ஒரு மாதத்தில் அனைத்து திரும்பப் பெறுதல் மற்றும் பரிமாற்றங்களின் மொத்த தொகை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கவேண்டும். குறிப்பிட்ட இரண்டு மாதங்களுக்குள் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) டெபாசிட்தாரர் சமர்ப்பிக்கத் தவறினால், அவர் கணக்கு அலுவலகத்தில் நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பிக்கும் வரை அவரது கணக்கு செயல்படாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.