ஆவினில், ‘டீ மேட்’ எனப்படும் சிவப்பு நிற பால் பாக்கெட் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் வாயிலாக விற்பனைக்கு வரும் சிவப்பு நிற பால் பாக்கெட்டிற்கு, ‘டீ மேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், 6.5 சதவீத கொழுப்பு சத்து உள்ளது. வர்த்தக ரீதியான தேவைக்கு, 500 மி.லி., டீ மேட் பால் 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கொழுப்பு சத்துள்ள பால் தனியாரிடம் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் பால் விற்பனையை பாதிக்கும் என்பதால், சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையில் ஆவின் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த பால் விற்பனை வாயிலாக, ஆவினுக்கு லிட்டருக்கு 8 ரூபாய் லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக உதவும் வகையில் சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக மாதவரம் பால் பண்ணையில் சிவப்பு நிற பால் பாக்கெட் உற்பத்தி நடக்காது என்று கூறியுள்ள ஆவின் நிர்வாகம் படிப்படியாக மற்ற பால் பண்ணைகளிலும் சிவப்பு நிற பால் பாக்கெட்டின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.