காதலனை சந்தித்து வந்ததிலிருந்து கடுமையான வயிற்று வலியால் போராடிய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (56). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தங்கபாய் (51) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில், இரண்டு பேருக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் அபிதா, களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த வருண் என்பவரை காதிலித்து வந்துள்ளதாகவும், காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். அதன்பிறகு அபிதாவை கழட்டிவிடும் நடவடிக்கைகளில் வருண் இறங்கியுள்ளார். அவரை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்துள்ளார். அபிதா தொடர்ந்து கெஞ்சவே இளைஞர் அபிதாவை தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். காதலனை சந்தித்து வந்ததிலிருந்து கடுமையான வயிற்று வலியில் துடித்த மாணவி, மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

3 நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 4ஆம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவியின் தாயார் தங்கபாய், நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால், மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.