சனாதனம் பேச்சு தொடர்பான வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்கக் கோரியும், மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அனுமதி தேவை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவே விரும்பவில்லை என நீதிபதிகள் கூறினர். அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார். அவர் அரசின் பிரதிநிதி தனி நபர் அல்ல, அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.