லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுநர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சரக்கு லாரிகள் வழக்கமாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் போது பல்வேறு தட்ப வெப்பநிலையை ஓட்டுநர்கள் எதிர்கொள்கின்றனர். அதனால் உடல் வெகு சீக்கிரமே சோர்வு அடையலாம். இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. போக்குவரத்து துறையில் லாரி ஓட்டுநர்கள் முக்கிய பங்காற்றுவதாக கடந்த மாதம் கூறியிருந்த அமைச்சர் நிதின் கட்கரி, அவர்களின் பணிச்சூழல் மற்றும் மனநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதில் முக்கியமாக லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் என அவர் அறிவித்திருந்திருந்தார். இதனைத் தொடர்ந்து லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்2 மற்றும் என்3 லாரிகளின் கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. லாரி ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இந்த முடிவு லாரி ஓட்டுநர்களுக்கு வேலைக்கான வசதியான நிலைமைகளை வழங்குவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இதன் மூலம் லாரி டிரைவர்களின் செயல்திறனை மேம்படுவதுடன், சோர்வு பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.