சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடியிருந்த நிலையில், சுமார் 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து திரையிடல் நிறுத்தப்பட்டது.
மேலும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவும், நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.