கருட புராணம் என்பது பதினெட்டு வடமொழி புராணங்களுள் ஒன்று. கருடன் கேட்கும் கேள்விகளுக்கு விஷ்ணு பதில் கூறும் பாங்கில் மனித வாழ்வில் நிறைந்துள்ள பல சூட்சுமமான விடயங்களுக்கு விளக்கங்களைத் தருகிறது கருட புராணம். கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், மனிதனின் கருமங்களுக்குரிய பலன்கள், நரகம், சொர்க்கம், மறுபிறப்பு போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.
மேலும் மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்கு வெவ்வேறு தண்டனைகளையும் விளக்கியுள்ளனர். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தில் கருட புராணத்தில் இறப்பு பற்றியும் இறப்பின் அறிகுறிகள் பற்றியும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
கருட புராணத்தின் அடிப்படையில் மரணம் நிகழ்வதற்கு முன்னர் எமதர்ம ராஜா ஒரு நபருக்கு பல அறிகுறிகளைக் கொடுக்கிறார். அறிகுறிகள் ஒருவருடைய நிழல் தண்ணீரிலோ, எண்ணெயிலோ, கண்ணாடியிலோ தோன்றாவிட்டாலோ அல்லது ஒருவரின் நிழல் சிதைந்து காணப்பட்டாலோ, உடலை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கின்றது.
ஒருவன் இறக்கும் நாட்கள் நெருங்கும் போது அவரின் பார்வை மங்கத் தொடங்குகிறது. தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைக் கூட பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆனால், தன் வாழ்நாளில் நல்ல செயல்களையோ அல்லது கர்மங்களையோ செய்தவர், இறக்கும் போது மகிமையான ஒளியைக் பார்ப்பார் எனவும் கருட புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.
மரண நேரம் நெருங்கும்போது, எமனின் இரண்டு தூதர்கள் இறக்கப்போகும் நபரின் முன் நிற்பதாகவும் கருடபுராணம் கூறுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களைச் செய்தவர்கள் அதை பார்த்து அஞ்சுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர் உடலை விட்டு வெளியேறும் கடைசி நேரத்தில், அந்த நபரின் குரலும் மங்க ஆரம்பிக்கும். யாரோ திணறுவது போல் குரல் கரகரப்பாக மாறும்.
கருட புராணத்தின் படி, இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள். முன்னோர்கள் கனவில் அழுது கொண்டிருந்தால் அல்லது சோகமாக இருந்தால், உங்கள் மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாக கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.