அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயல்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. 1990களிலேயே உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை குடித்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்ட போதிலும், ஆசிய கண்டத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் இதன் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை. 1980 மற்றும் 1990களில் உலகிலேயே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக தற்கொலைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கியது.
2015இல் மட்டும் இந்தியாவில் 1,34,000 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதாகவும், அதில் 2,40,000 பேரின் இறப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2012இல் தென் கொரியாவில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட்ட உடனேயே, அந்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை உடனடியாக குறைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.