இந்தியாவில் 12 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான சீன மொபைல்களை தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் முதல் கால் பகுதிக்கான விற்பனையில் இத்தகைய 12 ஆயிரம் மதிப்பிலான மொபைல் விற்பனை மூன்றாம் இடம் வகிக்கிறது. அதிலும், சீன நிறுவனங்கள் மட்டுமே 80 சதவீத விற்பனையைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரிய நிறுவனங்களின் வியாபார போட்டியில் சிக்கித் தவிக்கும் இந்திய நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. xiaomi, vivo, oppo போன்ற சீன நிறுவனங்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதற்கு முன் இந்திய நிறுவனங்களான lava, micromax போன்ற நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் ஓரளவிற்கு லாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில், சீன நிறுவனங்கள் அதிக செயல்திறன் கொண்ட மொபைல்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால், அந்த நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றன. உலகின் மிகப்பெரிய டெக் சந்தையாக விளங்கும் இந்தியாவை இந்த நிறுவனங்கள் பெருமளவு நம்பியிருக்கும் சூழலில், இந்தியாவின் இந்த அதிரடி முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதுகுறித்து செய்தி வெளியான சமயத்தில் xioami நிறுவனத்தின் பங்குகள் பெருமளவு சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியச் சந்தையிலிருந்து சீன நிறுவனங்களின் செயலிகளைத் தடை செய்ததைத் தொடர்ந்து தற்போது இந்த தடை குறித்த பேச்சானது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. கல்வான் தாக்குதலுக்குப் பிறகு இந்திய-சீன உறவில் விரிசல் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன பொருட்களைத் தவிருங்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் அதை நோக்கிய பயணமாகப் பார்க்கப்படுகிறது.