டெல்லியில் செயல்பட்டு வரும் பிபிசி (BBC) ஊடக அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது பணியிலிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும், அங்கிருந்த ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது சோதனைகள் நடைபெற்று வருவதால் மேற்கொண்டு செய்திகள் எதுவும் வழங்காத வண்ணம் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு அதனுடன் அப்போதைய முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்குமான தொடர்பு குறித்தும் கூறப்பட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி எழுந்துவந்த நிலையில், தற்போது சோதனை நடைபெறுகிறது. நேற்றைய தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்பாதி முடிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் பிபிசி-யின் ஆவணப்படத்தை குறித்தும் கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது பிபிசி ஊடக அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.