சென்னை முகப்பேரில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன், மனைவி மற்றும் உறவினருடன் நடிகர் தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
பிக் பாஸ் தர்ஷன் இன்று காலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததால், அவர் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, அவர் அருகிலுள்ள கடைகளில் விசாரித்தார். டீக்கடையில் விசாரிக்கும் போது, அங்கிருந்த ஒரு குடும்பத்தினர், ’இது எங்களுடைய கார்’ என்று கூறினர்.
காரை உடனே எடுக்க கூறிய நிலையில், பிக் பாஸ் போனா நீ என்ன பெரிய ஆளா ஏன் உன்னாள் கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ண முடியாதா?’ என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தர்ஷனும் அவரது தம்பியும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பு ஏற்பட்டது.
இதில், தாக்கப்பட்டவர் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதி என்பவரும், அவரது தாயார் மகேஸ்வரி என்பவரும் தெரியவந்துள்ளது. ஆதிசூடி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர்கள் தங்களைத் தாக்கியதாகவும், ஆபாசமாகத் திட்டியதாகவும், கர்ப்பமாக இருக்கும் ஆதியின் மனைவியை அடித்ததாகவும் குற்றம்சாட்டி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்ட காவல்துறை நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.