நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் எளிமையாக குருவாயூரில் நடந்து முடிந்திருக்கிறது. கோயிலில் நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
முறைமாமன் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெயராம், அடுத்தடுத்து கமலுடன் தெனாலி, பஞ்ச தந்திரம், துப்பாக்கி போன்ற வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளார். மலையாள நடிகரான ஜெயராம், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளார் .
நடிகர் ஜெயராமுக்கு மாளவிகா என்கிற மகளும், காளிதாஸ் என்கிற மகனும் உள்ளனர். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் தந்தையை போலவே சினிமாவில் கலக்கி வருகிறார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார். குறிப்பாக பாவக் கதைகள், விக்ரம் போன்ற படங்களில் காளிதாஸின் நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களை பெற்றது. தற்போது தனுஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவ்னீத் கிரீஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பாலக்காட்டைச் சேர்ந்த நவ்னீத் லண்டனில் சாட்டர்ட் அக்கவுன்டன்ட்டாக பணிபுரிகிறார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் முடித்துள்ளனர். குருவாயூரில் எளிமையாக நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தை அடுத்து நடக்கும் ரிசப்ஷனில் நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயராமின் மகன் காளிதஸூக்கு கடந்த நவம்பர் மாதம் மாடல் தாரிணி என்பவருடன் நிச்சயம் முடிந்தது. மகள் திருமணத்தை அடுத்து மகன் திருமணத்தை நடத்த இருக்கிறார் ஜெயராம். மணமக்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.