நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். திரைத்துறையில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இயங்கி வந்தவர் என்ற வகையில் மனோஜ் பாரதிராஜாவின் திரை பயணம் மிக நீண்டது. தந்தை பாரதிராஜா மிகப் புகழ்பெற்ற இயக்குனரானாலும் நடிப்பின் மீதும், சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) அவரது வீட்டில் காலமானார்.
சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள மனோஜ் இல்லத்திற்கு அவரது உடலானது கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கமல்ஹாசன், இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோஜ் உடல் வைக்கப்பட்டு உள்ளது.
அப்போது நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல், நடிகர் சூர்யாவும் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று மாலை 3 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.. மனோஜ் நடித்த முதல் திரைப்படமான தாஜ்மஹால் திரைப்படத்தில் இருந்து சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் பாடலுடன் இறுதி ஊர்வல வாகனம் இல்லத்தில் இருந்து கிளம்பியது. பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Read more: அதிக மரங்களை வெட்டுவது ஒரு மனிதனை கொல்வதை விட கொடியது..!! – அபராதம் விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு