நடிகர் மாரிமுத்து மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் மாரிமுத்து. அதேபோல பரியேறும் பெருமாள், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்த மாரிமுத்து கடைசியாக ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்களின் இல்லங்களில் பிரபலமானவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பேசப்பட்டவர் மாரிமுத்து. தேனியைச் சேர்ந்த இவர், ராஜ்கிரன், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மாரிமுத்துவின் இறுதி சடங்கு சொந்த ஊரான தேனியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் – நடிகைகள் மற்றும் திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.