தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு. இவர், உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரத்பாபு வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக் குறைவால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவல் வெளியானதிலிருந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சரத்பாபு பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.