actor Sushant Singh Rajput: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான தற்கொலை வழக்கில், CBI தனது விசாரணையை முடித்து, வழக்கை மூடிவிட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங். இவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதி அறிக்கையை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், சுஷாந்த் சிங் வழக்கில் அனைத்து கோணங்களிலும் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.
இதுதவிர, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, அவரது காதலி என்று கூறப்படும் ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் தொடர்புடையவர்களின் வாக்குமூலங்களையும் சிபிஐ பதிவு செய்தது. மேலும், சுஷாந்தின் மருத்துவ பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அறுக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பீகார் போலீசில் அளித்த புகாரில், சுஷாந்தின் தந்தை, ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகனின் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை ரியா, தொலைக்காட்சி நேர்க்காணலில் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கொலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து தகவல்களும் தவறானவை எனவும், மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சிபிஐ இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையில் எய்ம்ஸ் நிபுணர்கள் “விஷம் மற்றும் கழுத்தை நெரித்தல்” என்ற கூற்றுகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது அறிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது மீண்டும் சிபிஐ மூலம் மேலும் விசாரணைக்கு உத்தரவிடுவதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.