தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து நடிகர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் பிறந்த நாளான நாளை அவரது சிலைக்கு மாலை அணிவிக்குமாறு, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். விஜயின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.