ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை தமன்னா வலம் வருகிறார். பையா, சுறா, தில்லாலங்கடி, பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் ஆடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் (viacom) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் பேர்பிளே (Fairplay) என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. இது கிரிக்கெட், சீட்டாட்டம், பேட்மிட்டன், டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும்.
பேர்பிளே செயலியில் ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தவகையில், அந்த செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத்- ஐ கடந்த 23ம் தேதி ஆஜராகும்படி சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர், அன்றைய நாளில் தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், வேறு தேதிக்கு தள்ளிவைக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, இதுவரை சைபர் க்ரைம் போலீஸார் சஞ்சய் தத் ஆஜராவதற்கான தேதியை கூறவில்லை. அதேபோல், இந்த செயலியின் விளம்பரங்களில் தோன்றிய நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஷர்த்தா கபூர் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
இதனையடுத்து, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 29-ந்தேதி நடிகை தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய நடிகர்கள் இந்த வழக்கில் சிக்கியதால், திரையுலகே அதிர்ச்சியில் உள்ளது.
நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்!