திவாலான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் திவால் ஆகி விட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. ஓம்காரா ஏஆர்சி நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் 2,059 கோடி ரூபாய் கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து 2,400 கோடி ரூபாயை காரைக்கால் துறைமுகம் திருப்பி செலுத்தாமல் தாமதித்த நிலையில், அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் காரைக்கால் துறைமுகத்துக்கு எதிராக தீர்ப்புகள் வந்தன. இதையடுத்து, தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்துக்கு விசாரணை சென்றது. பின்னர், காரைக்கால் துறைமுகம் திவால் அடைந்துவிட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது.
இந்நிலையில், தற்போது காரைக்கால் துறைமுகம் ஏலம் விட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதானிக்கு போட்டியாக வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவின் பல துறைமுகங்கள் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், காரைக்கால் துறைமுகம் அவரது கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றுக்கொடுத்த காரைக்கால் துறைமுகத்தை அதானி கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.