ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வரும் நிலையில், இவரது மகன் ஓம்பிரகாஷ் ஆன்லைன் கேமிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. ஓம்பிரகாஷுக்கு தற்போது 17 வயது ஆகிறது. இவர், எப்போது பார்த்தாலும் செல்போனில் ஃபீரி பயர் கேம் விளையாடி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்துப் பார்த்தும் அவர் கேட்பது போல் தெரியவில்லை.
ஆன்லைன் கேமால் அவருக்கு படிப்பும் சரியாக அமையவில்லை. இதனால், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர், வீட்டில் தினமும் ஃபிரீ பயர் விளையாடி வந்துள்ளார். இதையடுத்து, ஓம்பிரகாஷை அவரது பெற்றோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீடான நரேஷ் என்பவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கு வந்தும் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவரின் செல்போன் பழுதாகிவிட்டது.
ஆனால், ஃபோனை சரி செய்து கொண்டால், எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பான் என்பதால், உறவினர் நரேஷ், செல்போனை சரிசெய்து தராமல் இருந்துள்ளார். இதனால், கோபித்துக் கொண்ட சிறுவன் ஓம்பிரகாஷ், ஜனவரி 30ஆம் தேதி அதிகாலை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது, அந்த சிறுவன் சங்ககிரி (25 கிமீ) வரை நடந்தே சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பழுதான செல்போனை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து பெங்களூருவுக்கு சென்றுள்ளார் ஓம்பிரகாஷ். பின்னர், அங்கிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். அங்குள்ள சாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளான். இதனை கண்டறிந்த போலீசார், சிறுவனை மீட்டு ஈரோடு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
Read More : சாஹல் – தனஸ்ரீ விவகாரத்து உறுதி..!! அப்படினா அந்த விஷயம் உண்மையா..? முறைப்படி நீதிமன்றம் செல்ல சம்மதம்..!!