பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததற்காக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 63 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 6E-1052 என்ற இண்டிகோ விமானம் மும்பை சென்றுக்கொண்டிருந்தது. பயணிகளுடன் வந்த இந்த விமானத்தில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 63 வயது முதியவர் ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளது. அப்போது, விமானம் நடுவானில் சென்றுக்கொண்டிருந்தபோது, உணவு பரிமாறும் போது முதியவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது அசைவ உணவு கேட்ட ஜோனஸுக்கு அசைவ உணவு வழங்கிய பணிப்பெண் கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார். அப்போது பணிப்பெண்ணின் கையை பிடித்து இழுத்ததுடன் அவரிடம் சில்மிஷத்திலும் முதியவர் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விமானம் மும்பை விமான நிலையம் வந்தவுடன், பணிப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதியவருக்கு அந்தேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.