தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கடந்த 4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை மே மாத சம்பளத்துடனும், ஓய்வூதியத்துடனும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 1.1.2025 அன்று தேதிப்படி அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், 1.10.2025 முதல் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறலாம் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் கடந்த 4 மாத (ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.