மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனியை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார் பொதுச்செயலாளர் வைகோ. இச்சம்பவம் அக்கட்சியில் மட்டும் இன்றி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான மார்கோனி தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அக்கட்சியில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு பதவிகள் வகித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில இளைஞரணி செயலாளராகவும் உயர்ந்து சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு கிடைத்தது.
மேலும் கட்சியில் வைகோ, துரை வைகோ ஆகியோருடன் மிகவும் நெருக்கமுடன் பழகி வந்தார். இந்நிலையில் தான் மார்கோனியை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து வைகோ நீக்கியுள்ளார்.
மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வந்தது. அதில் ஒரு சில காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்கோனி பாஜகவுக்கு மாறப்போகிறார் என்ற ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு அடங்கியது. அதன் பின்னர் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது தருமபுரம் ஆதீனகர்த்தர் உள்ளிட்ட இந்து அமைப்புனருடன் நெருக்கமாக மார்கோனி பழகி வந்ததை தொடர்ந்து மார்கோனி பாஜகவுக்கு செல்வது நிச்சயம் என்றும் கூறப்பட்டது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பவுன்ராஜ் சீர்காழியில் உள்ள மார்கோனியின் வீட்டு வந்து அ.தி.மு.க வில் இணையும்மாறு அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு அடுத்த இரு தினங்கள் மார்கோனி சேலம் சென்று அப்படியே ரகசியமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துவிட்டதாகவும் செய்தி பரவியது. இதனையடுத்து தான், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க செயலாளர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சீர்காழியில் நேற்று முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் நடைபெற்றது. அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட செயளாலர் மார்கோனி தலைமையில் ம.தி.மு.க பொறுப்பாளர்கள் 28 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்தனர். சீர்காழி நகரசெயலார் பாலு, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஒன்றிய செயலாளர்கள், உள்ளிட்ட 28 பொருப்பாளர்கள் மற்றும் 17 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கூண்டோடு கட்சியை விட்டு விலகியதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி, “வைகோவுக்கு பிறகு தான் லண்டன் சென்று செட்டில் ஆகி விடுவதாக துரை வைகோ தெரிவித்து இருந்தார். இந்த கட்சிக்காக 30 ஆண்டுகளாக தாங்கள் உழைத்து வரும் நிலையில் எந்த உழைப்பும் இல்லாமல் துரை வைகோ வாரிசு அரசியலில் பதவிக்கு வந்துள்ளார். நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிக்காத நிலைமை மதிமுகவில் நிலவுகிறது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். மேலும் என் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து பதவி நீக்கம் செய்துள்ளனர்.
எனது பதவி நீக்கத்திற்கான உண்மையான காரணம் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துரை வைகோ பேசும்போது, அவரின் பேச்சு பிடிக்காமல் பாதியில் எழுந்து வந்தேன், அதன் எதிரொலியாக இந்த பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் துரை வைகோ கட்சி செயல்பாடுகள் குறித்து இன்னும் ஏராளமான குறைகளை தெரிவிக்கலாம். ஆனால் நாகரீகம் கருதி அவற்றையெல்லாம் தெரிவிக்காமல் உள்ளேன்” என்றார். மேலும், தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். பின்னர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் பொருத்தப்பட்டிருந்த மதிமுக கொடியினை பொறுப்பாளர்கள் அனைவரும் அகற்றினர்.