இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியாகும் எனவும், அது மக்களிடம் பேசுபொருளாக இருக்கும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்னும் 4 நாட்களில் அதிமுகவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கடந்த பிப்.5ஆம் தேதி தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டல மக்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தனர். மேலும், விவசாயிகள் முதல் வெளிநாடு வாழ் தமிழர்கள் வரை தங்கள் கருத்துகளை ஆன்லைன் வழியாகவும், அஞ்சல் மூலமாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் அறிக்கை குழுவினர் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
“சென்னை மண்டலத்தில் இருந்து 512 கோரிக்கை மனுக்களும், வேலூர் மண்டலத்தில் இருந்து 773 கோரிக்கை மனுக்களும் வந்துள்ளது. மொத்தமாக 6,571 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் இடம் பெற்றுள்ளன. மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைப் பிரித்து செயலாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து இன்னும் 4 நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் பேசு பொருளாக இருக்கும். இது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாகவும் அமையும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.