தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்ட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற திமுகவைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் தலைமை கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதோடு அதிமுகவின் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று கொண்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது எனவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற ஒருவர் தமிழக அமைச்சரவையில் நீடிக்க முடியாது, போன்ற கோஷங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.