”அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், கட்சியின் லெட்டர் பேட் மற்றும் முத்திரையை அவர் பயன்படுத்த முடியாது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சி விதிகளை திருத்தியதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான மனுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சரும், எம்பி-யுமான சி.வி.சண்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை கடந்த ஜூலை 13ஆம் தேதி சமர்பித்தோம். 2,456 ஆதரவு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தோம். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில், அந்த உத்தரவு நகலையும் வைத்துள்ளதாக கூறிய அவர், தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து இணையத்தில் வெளியிட மனு அளித்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் பெயர், முத்திரை, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவது தவறானது என தெரிவித்தார். முதலமைச்சராக இருந்த அவருக்கு இது தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்ட சி.வி.சண்முகம், குண்டர்களை வைத்து அதிமுக அலுவலகத்தை சூறையாடிய ஓபிஎஸ், இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என சாடினார். நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது இது அனைத்தையும் எடுத்துரைப்போம் என்றும் விளக்கம் அளித்தார்.