பெற்ற குழந்தைகளுக்கு இருக்கும் அதே உரிமை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உண்டு எனவும் வளர்ப்பு பிள்ளைகளும் பெற்றோரின் வேலையை பெறலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசுப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்துவிட்டால், அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை இறந்தவரின மகனுக்கோ, மகளுக்கோ வழங்கப்படும். ஆனால், ஒருவேளை இறந்தவருக்கு வளர்ப்பு பிள்ளைகள் இருந்தால் இந்த வேலை வழங்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாக இருந்தது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது தொடர்பான ஒரு வழக்கில், ’’வளர்ப்பு குழந்தைகளும் கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலையை பெறலாம்’’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு வழக்கறிஞர் 4ம் நிலை ஊழியராக பணியாற்றிய முட்டாட்டி என்பவர், கடந்த 2011ம் ஆண்டு தன்னுடைய சொந்த மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்த கிரீஷ் என்பவரை தத்தெடுத்திருக்கின்றார். அவருக்கு மன வளர்ச்சி குறைபாட்டுடன் ஒரு மகள் உண்டு. 2018ல் முட்டாட்டி இறந்ததால் தனக்கு பணியை தருமாறு கிரீஷ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் 2021ல் விண்ணப்பம் 1996ம் ஆண்டு கர்நாடக சிவில் சர்வீஸ் விதிகள் மேற்கோள் காட்டப்பட்டு வளர்ப்பு மகன் என்பதால் உயர்நீதிமன்றத்தின் ஒற்றை அமர்வு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர்நீதமன்றத்தை கிரீஷ் நாடியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி சூரஜ் கோவிந்த ராஜ், ஜி பசவராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது கூறிய நீதிபதிகள்’’எங்கள் கருத்தில் தற்போதிருக்கும் விதிகளின் அடிப்படையில் பிரதிவாதி எண்.2 மற்றும் 4 மூலம் வளர்ப்பு மகனுக்கும், இயற்கையான மகனுக்கும் இடையே உள்ள வேறுபாடு இந்த விஷயத்தில் எந்த தாக்கத்தையும் அல்லது பங்கையும் கொண்டிருக்காது. இது அரசியலமைப்பின் 14வது பிரிவை மீறும் செயற்கையான வேறுபாட்டை நீக்கும் வகையில் கூறப்பட்ட விதிகள் திருத்தப்பட்டிருக்கின்றன. பெற்ற குழந்தைக்கு இருக்கும் உரிமை தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் உண்டு. எனவே கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலைக்காக பரிசீலிக்கப்படும்போது அவர்கள் மீது பாகுபாடு காட்ட முடியாது. கருணை நியமனம் கோரி வளர்ப்பு மகன் விண்ணப்பித்தது நேர்மையானது. எனவே வேறுபாடு பார்க்காமல் இயற்கையான மகனாய் கருத வேண்டும் என சம்மந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டது.