மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட ‘கட் அவுட்’ எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில், நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, வடபழனி, அசோக் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள கட்டடங்களில் விளம்பர பலகை வரிசை கட்டுகின்றன. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுகொள்வதாக தெரியவில்லை என்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.