ஏரோ இந்தியா கண்காட்சியைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து பெங்களூரு நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏரோ இந்தியா 2023, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சி ஆகும். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 13-17 வரை இந்த கண்காட்சில் நடைபெற உள்ளது. 1996 முதல் பெங்களூருவின் யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்த கண்காட்சியை கருத்தில் கொண்டு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை இறைச்சிக் கடைகள், அசைவ மற்றும் உணவகங்களை மூட பெங்களூரு நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடைகள், அசைவ ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களின் கவனத்திற்கு… ,ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை”. யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் இருந்து 10 கிமீ சுற்றளவில் அனைத்து இறைச்சி / கோழி / மீன் கடைகளை மூட வேண்டும்.. அங்கு அசைவ உணவுகளை வழங்குவது / விற்பனை செய்வது தடைசெய்யப்படும்.. இதை மீறினால், பிபிஎம்பி சட்டம்-2020 மற்றும் இந்திய விமான விதிகள் 1937ன் விதி 91ன் கீழ் தண்டனை விதிக்கப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
பொது இடங்களில் சிதறிக்கிடக்கும் அசைவ உணவுகள் ஏராளமான பறவைகளை ஈர்க்கின்றன.. இது நடுவானில் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
இதனிடையே ஏரோ இந்தியா, தனது இணையதளத்தில், மொத்தம் 731 கண்காட்சியாளர்கள், 633 இந்தியர்கள் மற்றும் 98 வெளிநாட்டினர் விமானக் காட்சிக்கு பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஏரோ இந்தியா உலகளவில் முதன்மையான விண்வெளி கண்காட்சிகளில் ஒன்றாக தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் மற்றும் பதிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் செய்யலாம். இந்தியர்களுக்கு டிக்கெட்டு விலை ரூ. 5,000 ஆக இருக்கும், வெளிநாட்டினருக்கு 150 அமெரிக்க டாலர்கள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..