ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள், 1,562 ஏக்கர் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், “27 கிலோ தங்கம், வைர, வெள்ளி நகைகள் மற்றும் 1,562 நிலப்பத்திரங்களை வரும் பிப்ரவரி 14, 15aஅம் தேதிகளில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நகைகளை எடுத்துச் செல்ல 6 பெட்டிகள் கொண்டுவர வேண்டும். உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய ஒளிப்பதிவாளர்கள் இருக்க வேண்டும். கர்நாடக அரசு உரிய பாதுகாப்புடன் ஜெயலலிதாவின் நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கடந்த 2004ஆம் ஆண்டு இந்த சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன. இந்நிலையில் தான், சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Read More : ரூ.1.25 லட்சம் கடன் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்படி விண்ணப்பது..?